மாவட்டத்தில் சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 30 July 2020 4:35 AM GMT (Updated: 30 July 2020 4:35 AM GMT)

சேலம் மாவட்டத்தில் சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடையில்லா மின்சாரம்

வேளாண்மையில் நீர்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்கத்தில் 2013-2014-ம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்து கொடுத்து வருகிறது. சூரியசக்தி பம்பு செட்டுகள் மூலம் மின்இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்துக்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.

இந்த நிலையில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கிட ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியம்

முதல் தவணையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கு சிறப்பு ஒதுக்கீடாக 5-ம், 2-வது தவணையாக 283-ம் என மொத்தம் 288 மோட்டார் பம்பு செட்டுகள், 2020-2021-ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும், தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் செயல்படுத்தப்படுகிறது.

30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இதுவரை இலவச மின் இணைப்புகோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்பு செட்டுகளை அமைத்திட இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பங்கள்

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள அனைத்து வட்டார விவசாயிகள் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல்துறை குமாரசாமிப்பட்டி சேலம் மற்றும் உதவி செயற்பொறியாளர் கோனூர் அஞ்சல், குஞ்சாண்டியூர், மேட்டூர் மற்றும் உதவி செயற்பொறியாளர் 60 அடி சாலை, காந்திநகர், ஆத்தூர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணா காம்ப்ளக்ஸ், சேலம் மெயின்ரோடு சங்ககிரி ஆகிய அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story