நீலகிரி மாவட்டத்தில், 2 வாரத்தில் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு


நீலகிரி மாவட்டத்தில், 2 வாரத்தில் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 10:15 PM GMT (Updated: 1 Aug 2020 3:49 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 2 வாரத்தில் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஜூன் 14-ந் தேதி வரை மொத்தம் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதுவரை ஒற்றை இலக்கங்களில் பாதிப்பு அறிவிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் வைரஸ் வேகமாக பரவியதால் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஊட்டி அருகே எல்லநள்ளியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலைக்கு கொரோனா பாதித்தவர் வந்து சென்றதால் 110-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கிராமங்களில் நடந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் கொரோனா பாதித்த நபர்கள் கலந்து கொண்டதாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவியது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதியானது. இதனால் சில கிராமங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்கள் நடத்தி யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா என்று கண்டறிந்து வருகின்றனர்.

கடந்த 15-ந் தேதி முதல் நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதிகபட்சமாக ஒரே நாளில் 78 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 40, 30, 50-க்கு மேல் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்ததால் குறுகிய நாட்களில் பாதிப்பு 500-ஐ தாண்டியது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 768 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2 வாரத்தில் 529 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி தென்படாததால் அவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story