கந்திலி போலீஸ் நிலையம் அருகே, முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மளிகைக்கடைக்காரர் வீட்டில் பணம் கொள்ளை - பிடிக்க முயன்ற வாலிபரை குத்தி விட்டு தப்பியோட்டம்


கந்திலி போலீஸ் நிலையம் அருகே, முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மளிகைக்கடைக்காரர் வீட்டில் பணம் கொள்ளை - பிடிக்க முயன்ற வாலிபரை குத்தி விட்டு தப்பியோட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2020 6:00 AM GMT (Updated: 2 Aug 2020 5:44 AM GMT)

கந்திலி போலீஸ் நிலையம் அருகே மளிகைக்கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் பணம், மளிகைப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை அடுத்த கந்திலியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 70). இவருடைய மகன்கள் ஸ்ரீதர் (50), கிருஷ்ணகுமார் (45). இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களின் வீடு மற்றும் மளிகைக்கடை கந்திலி போலீஸ் நிலையம் அருகில் உள்ளது. ஆடிவெள்ளியையொட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஸ்ரீதரின் மனைவி கோவிலுக்குச் சென்றிருந்தார். அவருக்காக ஸ்ரீதர் வீட்டுக்கு வெளியே வெகுநேரம் காத்திருந்தார்.

அப்போது 2 பேர் அவரின் வீட்டுக்கு வந்து அரிசி மூட்டை வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அவர்களை ஸ்ரீதர் அழைத்துக் கொண்டு கடைக்குள் சென்றார். அவர்கள் திடீரெனக் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை எடுக்குமாறு கூறி மிரட்டினர். அந்த நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 5 பேர் ஸ்ரீதரின் வீட்டுக்குள் திடீரென நுழைந்தனர். அவர்களும் கத்தியை காட்டி ஸ்ரீதரிடம் நகை, பணத்தை எடுத்துத்தருமாறு கூறி மிரட்டினர்.

ஸ்ரீதர் திடீரெனச் கூச்சல் போடவே வீட்டின் உள்ளே இருந்த சீனிவாசன், கிருஷ்ணகுமார் அவரது மனைவிகள் ஆகியோர் வெளியே ஓடி வந்தனர். அந்தக் கும்பல் விரைந்து வந்து, அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். மளிகைக்கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம், முந்திரி பருப்பு, அரிசி உள்பட பல்வேறு மளிகைப் பொருட்களை கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

அப்போது கொள்ளையர்களை பிடிக்க முயன்ற ஸ்ரீதருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் திருடன் திருடன் எனச் கூச்சல் போடவே, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த சசிதரன் (23) ஓடி வந்து கும்பலை சேர்ந்த ஒருவரை பிடிக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர், கத்தியால் சசிதரனின் மார்பில் பயங்கரமாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

அதில் படுகாயம் அடைந்த சசிதரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படுகாயம் அடைந்த மளிகைக்கடை உரிமையாளர் ஸ்ரீதர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கந்திலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கந்திலியை அடுத்த கும்மிடிகாம்பட்டியில் சந்தேகப்படும் படியாகச் சுற்றித்திரிந்த ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர், சோளிங்கரை சேர்ந்த தரணிகுமார் (32) எனத் தெரிய வந்தது. அவர், ஸ்ரீதரின் மளிகைக்கடையில் நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டவர் எனத் தெரிய வருகிறது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Next Story