கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2020 4:45 AM IST (Updated: 3 Aug 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. ஏற்கனவே மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, அனில் பெனகே, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், பாரண்ணா முனவள்ளி, பசவராஜ் மத்திமோட், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேகவுடா, அஜய்சிங், சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, ரங்கநாத், பரமேஸ்வர் நாயக், ராகவேந்திர ஹித்னால், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா ஆகியோரும், பா.ஜனதா எம்.பி பகவந்த் கூபா, சுயேச்சை எம்.பி. சுமலதா மற்றும் மேல்-சபை உறுப்பினர்கள் பிரானேஷ், சந்தேஷ் நாகராஜ், சந்திரசேகர் பட்டீல் ஆகியோரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் மந்திரி சி.டி.ரவி, எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, மகாந்தேஷ் கவுஜலகி, சரத் பச்சேகவுடா, சுமலதா எம்.பி. ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கொப்பல் மாவட்டம் எலபுர்கா சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹாலப்பா ஆச்சார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொப்பல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சங்கண்ணா கரடி எம்.பி. தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பாரண்ணா முனவள்ளி, ராகவேந்திர ஹித்னால் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் நான் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னுடைய அலுவலக ஊழியர்கள் ஆகியோர் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே நேற்று மதியம் மண்டியா மாவட்டம் நாகமங்களா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுரேஷ்கவுடா எம்.எல்.ஏ. பெங்களூருவில் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். அந்த மருத்துவ அறிக்கையின் முடிவில் சுரேஷ்கவுடா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹாலப்பா ஆச்சார், சுரேஷ் கவுடாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story