சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ்காரர் முருகன் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ்காரர் முருகன் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2020 4:00 AM IST (Updated: 4 Aug 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ்காரர் முருகன் ஜாமீன் மனு குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்க அவகாசம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தேன். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். சம்பவம் நடந்த அன்று இரவு 8.15 மணி அளவில்தான் போலீஸ் நிலையம் வந்தேன். அப்போது ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான புகாரில் கையெழுத்து போடுமாறு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வற்புறுத்தினார். அவரின் கட்டாயத்தின் பேரில் அந்த புகாரில் கையெழுத்து போட்டேன்.

அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்டனர். விசாரணையும் முடிவடைந்து உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்தநிலையில், முருகனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி, ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story