முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இந்த அணையின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையுள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. இந்த அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை மழை பொய்த்து போனதாலும், தென்மேற்கு பருவமழை தாமதித்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இந்தநிலையில் கடந்த 2 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்பேரில், அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள மாநிலம், குமுளி அருகே தேக்கடியில் உள்ள அணையின் மதகில் இருந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மதுரை பொதுப்பணித்துறை பெரியாறு- வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முதல்போக பாசனத்துக்கு வினாடிக்கு 200 கன அடி மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 100 கன அடி என 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. மேலும் அணையின் தண்ணீர் இருப்பை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் சேமித்து வைக்கப்படும்.
நேற்று அணையின் நீர்மட்டம் 137 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 211 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 2,160 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் இருப்பு 6 ஆயிரத்து 370 மில்லியன் கன அடியாக இருந்தது.
Related Tags :
Next Story