ஊட்டியில் சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றினார்

ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
ஊட்டி,
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 74-வது சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அளித்த மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
ஊட்டி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிவன், மின்சார வாரியம், பேரூராட்சிகள், நகராட்சிகளின் அலுவலர்கள் உள்பட 45 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் மேடையில் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
இதையடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த குழுவினரின் கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை குறித்து தத்ரூபமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் போலீசார் மரியாதை அளித்தனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த அள்ளி கவுடரை கவுரவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அலுவலர்கள் அவரது வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கவுரவித்தனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், நீலகிரி மாவட்ட வன அதிகாரி குருசாமி, எச்.ஏ.டி.பி. திட்ட இயக்குனர் சராயு, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குறைந்த நபர்களுடன் சுதந்திர தினவிழா நடந்தது. வழக்கமாக போலீஸ் அணிவகுப்புடன், தீயணைப்பு வீரர்கள், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு இடம்பெறும். ஆனால் நடப்பாண்டில் அணிவகுப்பு நடைபெறவில்லை. நீலகிரி பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கலாசார நடனங்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. விழாவுக்கு வந்தவர்கள் காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆர்.டி.ஓ. ராஜகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். இதேபோல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தினேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பாஸ்கரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் அய்யப்பனும், ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் செயல் அலுவலர் நாகராஜனும், தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் செயல் அலுவலர் வேணுகோபாலனும், நடுவட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் செயல் அலுவலர் நந்தகுமாரும், ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் சுனிலும் மசினகுடி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் மாதேவிமோகனும் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குன்னூர் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியவும், கைகளை கழுவி சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன் தெருகிராம நலசங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்கத் தலைவர் ஜான்பீட்டர் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உபதலைகாந்தி நகரில் பொதுமக்கள் நற்பணி சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க தலைவர் சபாபதி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் சமூக இடைவெளியுடன் சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்கள். இதனால் ஒரு சில மாணவர்கள் தங்களது வீட்டிலேயே தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் அரசு மருத்துவர் சிவக்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பார்த்திபன் உள்பட மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினர். கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செயல் அலுவலர் மணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தூய்மை பணியாளர்களை பொன்னாடை அணிவித்து கெளரவித்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் ராம்குமாரும், கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியர் சிவராமனும், பெட்டட்டி கிராமத்தில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் இளிதொரை கே. ராமச்சந்திரனும், கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தர்மராஜூம் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
குண்டாடா அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டனும், முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நடந்த விழாவில் செயலாளர் வஹாப்பும், கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த விழாவில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியும் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.
கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செயல் அலுவலர் ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செயல் அலுவலர் மோசஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முள்ளிகூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற அலுவலர் பிரேமா ராதாகிருஷ்ணனும், மேல்குந்தா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசும் தேசியக்கொடியை ஏற்றினர்.
மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெளலத் நிஷா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். எமரால்டு போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
Related Tags :
Next Story