பூதப்பாண்டி அருகே, நள்ளிரவில் குளத்தில் குதித்து தப்ப முயன்ற திருடன் -பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பூதப்பாண்டி அருகே நள்ளிரவில் குளத்தில் குதித்து தப்ப முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் தாவீது. இவர் நள்ளிரவில் கடற்கரை பகுதியில் இருந்து வியாபாரத்துக்காக மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்தார். அப்போது, 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டும், மற்றொரு வாலிபர் வேறோரு மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டியபடியும் சென்றனர். இதை கண்டு சந்தேகமடைந்த தாவீது திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். மற்றொருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விடாமல் துரத்தினர். அப்போது, அந்த வாலிபர் திடீரென குளத்துக்குள் பாய்ந்து தப்ப முயன்றார்.
ஆனால், பொதுமக்களும் பின்னாலேயே குதித்து அவரை மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்த னர். இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிடிபட்டவர் மேலப்பெருவிளை சானல்கரையை சேர்ந்த செல்வகுமார் (வயது 21) என்பதும், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரூபன் மற்றும் கீழபெருவிளையை சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரிய வந்தது. செல்வகுமார், அருள் பாண்டியன் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். குளத்துக்குள் குதித்து தப்ப முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story