இ-பாஸ் நடைமுறை ரத்து: புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வர தடையில்லை - வெளியூர் செல்ல அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்க வேண்டும்


இ-பாஸ் நடைமுறை ரத்து: புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வர தடையில்லை - வெளியூர் செல்ல அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2020 5:45 AM IST (Updated: 26 Aug 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களுக்குள் செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறையை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்ததுபோல் ரத்து செய்யவேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 23-ந்தேதி முதல் இ-பாஸ் வழங்குவது கைவிடப்பட்டது. அதற்கான இணையதளத்தின் முகப்பிலேயே மத்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் இ-பாஸ் நடைமுறை உள்ளது. புதுவையில் இ-பாஸ் வழங்கப்படாததன் காரணமாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம். அவர்களுக்கு புதுவை எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். புதுவை மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து அவர்கள் வழங்கும் இ-பாஸ் மூலம் அந்த மாநிலங்களுக்கு செல்லலாம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story