தாயாரை வீட்டை விட்டு விரட்டிய ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்


தாயாரை வீட்டை விட்டு விரட்டிய ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்
x
தினத்தந்தி 28 Aug 2020 6:37 AM IST (Updated: 28 Aug 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வீட்டை விட்டு விரட்டியதாக ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மீது அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு வடக்கு வீதியை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 61). இவர்களது மகன் கோபிநாத். ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கலியன் இறந்துவிட்டதால் மங்கையர்கரசி, கோபிநாத் பராமரிப்பில் இருந்து வந்தார்.

பாகூர் பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்ற மங்கையர்கரசி, அந்த தொகையை மகன் கோபிநாத்திடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தாயார் மங்கையர்கரசியை வீட்டை விட்டு விரட்டிதாக கூறப்படுகிறது.

இதனால் இருக்க இடமின்றி தவித்த அவர் புதுவை கடற்கரை சாலையில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்திற்கு மகன் மீது புகார் தெரிவிக்க நேற்று காலை வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை முதல்-அமைச்சரிடம் சென்று முறையிடும்படி அனுப்பி வைத்தார். உடனே முதல்-அமைச்சரை சந்திக்க மங்கையர்கரசி சட்டசபைக்கு சென்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஐ.ஆர்.பி.என். கமாண்டன்ட் அலுவலகத்தில் மங்கையர்கரசியை புகார் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் போலீஸ் அதிகாரியிடம் புகார் செய்தார். இது தொடர்பாக கோபிநாத்திடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story