திருப்பூரில் பயங்கரம்: அரசு கல்லூரி விடுதிக்குள் வாலிபர் அடித்து கொலை - தொழிலாளர்கள் 4 பேர் கைது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி விடுதிக்குள் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் திருப்பூர் மாஸ்கோ நகர் ஞானப்பிரகாசம் வீதியில் தங்கியிருந்து பனியன் பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிக்குள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அருண்குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்குமாருக்கும், மாஸ்கோ நகர் கிருஷ்ணா நகரை சேர்ந்த முத்துக்குமாருக்கும்(23) இடையே கடந்த 24-ந் தேதி அங்குள்ள பாறைக்குழி அருகே வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் தனது மோட்டார் சைக்கிளை அருண்குமார் மீது மோதுவது போல் சென்றுள்ளார். இதை அருண்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்தநிலையில் முத்துக்குமாரை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முத்துக்குமாரும், அவருடைய நண்பர்களான துவாரகை நகரை சேர்ந்த சுந்தர்(23), வசந்தம் நகரை சேர்ந்த தமிழ்செல்வன்(20), ஸ்ரீவித்யா நகரை சேர்ந்த பரத்குமார்(21) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிக்குள் அமர்ந்து கேரம் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு விடுதி மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சுவர் ஏறிக்குதித்து 4 பேரும் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த அருண்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு சென்றுள்ளார். கடந்த 24-ந் தேதி தன்னை தாக்கியது குறித்து அருண்குமார், முத்துக்குமாரிடம் கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அருண்குமாருடன் வந்த 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்த முத்துக்குமார், சுந்தர், தமிழ்செல்வன், பரத்குமார் ஆகியோர் சேர்ந்து அருண்குமாரை கிரிக்கெட் ஸ்டம்ப் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அருண்குமார் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், சுந்தர், தமிழ்செல்வன், பரத்குமார் ஆகிய 4 பேரை வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளர்கள் ஆவார் கள்.
Related Tags :
Next Story