நீலகிரி மாவட்டத்தில், மேலும் 38 பேருக்கு கொரோனா - ஊட்டியில் 2 வங்கிகள், தனியார் மருத்துவமனை மூடல்


நீலகிரி மாவட்டத்தில், மேலும் 38 பேருக்கு கொரோனா - ஊட்டியில் 2 வங்கிகள், தனியார் மருத்துவமனை மூடல்
x
தினத்தந்தி 29 Aug 2020 3:15 AM IST (Updated: 29 Aug 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. கொரோனா பாதிப்பால் ஊட்டியில் 2 வங்கிகள், தனியார் மருத்துவமனை மூடப்பட்டு உள்ளன.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,497 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. நீலகிரியை சேர்ந்த ஒருவர் இம்மாவட்ட பட்டியலில் சேர்த்து திருத்திய பட்டியல் 1,498 ஆக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது திருச்சிகடியை சேர்ந்த ஒரு சிறுவன், 3 ஆண்கள், 3 பெண்கள், ஒரு சிறுமி, பில்லிக்கம்பையை சேர்ந்த 4 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 38 பேருக்கு வைரஸ் உறுதியானது.

இதனால நீலகிரியில் கொரோனா பாதிப்பு 1,536 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 1,220 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 10 பேர் உயிரிழந்தனர். 306 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள கனரா வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதனால் வைரசை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கையாகவும் நேற்று கனரா வங்கி மூடப்பட்டது. வங்கி ஊழியருடன் தொடர்பில் இருந்த வங்கி மேலாளர் உள்பட 10 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வங்கி மூடப்பட்டது.

மேலும் சேரிங்கிராஸ் சந்திப்பில் உள்ள யூகோ வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கி மூடப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்த வங்கி ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 65 வயதான பெண் டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக தனியார் மருத்துவமனை மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் உள்பட 16 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.

Next Story