ரூ.21 லட்சம் கஞ்சா பறிமுதல் வழக்கில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது

நாமக்கல் அருகே ரூ.21 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
ஆந்திராவில் இருந்து கரூருக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நாமக்கல்- சேலம் சாலை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் லாரியில் 2 கிலோ எடை கொண்ட சுமார் 105 கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.2 லட்சத்து 490 மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (வயது42) மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த குமார் (43), திண்டுக்கல் மாவட்டம் போச்சநாய்க்கன்பட்டியை சேர்ந்த பாலையா (43) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் 17 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.62 லட்சம் மதிப்பிலான 620 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story