கபிஸ்தலம் அருகே பயங்கரம்: காரை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்


கபிஸ்தலம் அருகே பயங்கரம்: காரை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:45 AM IST (Updated: 5 Sept 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே காரை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கபிஸ்தலம்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் வினோத்கண்ணா(வயது 30). வெளிநாட்டில் வேலை செய்து வந்த வினோத்கண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இவருக்கும் கபிஸ்தலம் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த ஹேமாவதி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரில் இருந்து வந்த வினோத்கண்ணா நேற்று காரில் தனது மனைவி ஊரான மணலூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் கும்பகோணம் நோக்கி சென்றார். திருவையாறு-கும்பகோணம் சாலையில் மேட்டுத்தெரு கிராமம் அருகில் காவிரி ஆற்றில் இருந்து மண்ணியாறு பிரியும் தலைப்பு பகுதியில் அவர் காரில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென முந்திச்சென்று காரை வழிமறித்தனர். திடீரென தனது காரை சிலர் மறித்ததால் அதிர்ச்சி அடைந்த வினோத்கண்ணா காரில் இருந்து இறங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்கண்ணாவை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த வினோத்கண்ணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

அப்போது கொலையாளிகளில் ஒருவர், தான் வந்த மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டுச்சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் ‘ராஜராஜன்’ வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பின்னர் வினோத்கண்ணா உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றி அந்த மோட்டார் சைக்கிள் யாருக்கு சொந்தமானது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்கண்ணாவை வெட்டிக்கொன்றது யார்? அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story