மதுரையில், கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


மதுரையில், கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 8 Sep 2020 5:45 AM GMT (Updated: 8 Sep 2020 5:14 AM GMT)

மதுரையில் கொரோனாவிற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை,

கொடூர கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது. நோய் தொற்றால் போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவை சேர்ந்த மலைச்சாமி (வயது 56) மதுரை மாநகர சிறப்பு நுண்ணறிவுப்பிரிவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மருத்துவ விடுப்பில் சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் மலைச்சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை மலைச்சாமி பரிதாபமாக இறந்தார். அவருக்கு வசந்தி என்ற மனைவியும் அருண்குமார், விக்னேஷ்குமார் என்ற மகன்களும் உள்ளனர். இவரது சொந்த ஊர் உசிலம்பட்டி செம்மேட்டுபட்டி ஆகும். மதுரை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் மாதம் மதுரை புறநகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி கொரோனாவிற்கு முதன்முதலாக பலியானார். மதுரை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கர் கடந்த மாதம் இறந்தார். தற்போது 3-வதாக மலைச்சாமி கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

Next Story