நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்


நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 Sep 2020 7:42 PM GMT (Updated: 9 Sep 2020 7:42 PM GMT)

நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் அவ்வப்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 1-ந்தேதியில் இருந்து தமிழகத்துக்குள் மாவட்டத்துக்குள்ளும், கடந்த 7-ந்தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் 75 சதவீத பஸ்கள் அனைத்து பணிமனைகளில் இருந்தும் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். மேலும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அலைமோதிய பயணிகள் கூட்டம்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அங்கு 4-வது பிளாட்பாரத்தில் இருந்தே வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாநகரத்தில் ஓடக்கூடிய நகர பஸ்களும், புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த2 பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை நகர பஸ்களில் செல்கின்ற பயணிகள், ஆம்னி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு சிறிது தூரம் உடைமைகளுடன் நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு 675 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து 12 அரசு விரைவு பஸ்கள் சென்னைக்கும், ஒரு பஸ் கோவைக்கும், ஒரு பஸ் ஓசூருக்கும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முதல் நெல்லையில் இருந்து திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக 15 பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பல்வேறு கிராமங்களுக்கும் இரவிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை மாநகரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, போக்குவரத்தும் அதிகரித்ததால், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இதேபோன்று திருச்சியில் இருந்து திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலிலும் நேற்று ஏராளமான பயணிகள் நெல்லைக்கு வந்தனர்.


Next Story