குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்


குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:27 AM GMT (Updated: 15 Sep 2020 2:27 AM GMT)

மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட பொது சுகாதார துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் விழா, சிவகங்கை நகராட்சி தாய்-சேய் நல மையத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதா மணி வரவேற்று பேசினார்.

விழாவில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

பொதுவாக குழந்தைகளுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 11 ஜி.எம்.எஸ். என்ற அளவில் இருக்கவேண்டும். ஆனால் தற்போது 10 வரை தான் உள்ளது.இதனால் குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைவு மற்றும் பல்வேறு நோய்களை ஏற்படுகிறது. இதனால் அரசின் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

2 கட்டம்

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் பூட்டப்பட்டு இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில், 2 கட்டமாக இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் இந்த மாத்திரைகளை மதிய உணவிற்கு பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி, நகர் நல மைய மருத்துவ அலுவலர் கலாதேவி, உதவி திட்ட மேலாளர் டாக்டர் அரவிந்த்ஆதவன், டாக்டர் பாலஅபிராமி, சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Next Story