ராமநாதபுரம் அருகே, பெண்ணை கொலை செய்த ஐஸ் வியாபாரி கைது


ராமநாதபுரம் அருகே, பெண்ணை கொலை செய்த ஐஸ் வியாபாரி கைது
x
தினத்தந்தி 19 Sep 2020 4:45 AM GMT (Updated: 19 Sep 2020 4:50 AM GMT)

ராமநாதபுரம் அருகே பெண்ணை கொலை செய்த ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ரெட்டையூரணி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி விஜயராணி (வயது 51). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. காமராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். விஜயராணி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் விஜயராணியின் வீட்டுக்கு வந்தனர். விஜயராணி கழுத்தில் காயத்துடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீசாா் வந்து பாா்த்தபோது, விஜயராணியின் கழுத்து, முகத்தில் காயங்கள் இருந்தன. அவா் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) அரவிந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கன்னிராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(40) என்பவர் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் கன்னிராஜபுரத்திற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாலமுருகனை கைது செய்தனர்.

விசாரணையில் ஐஸ் கம்பெனியில் கடனுக்கு ஐஸ் எடுத்து வியாபாரம் செய்து வந்ததில், அந்த கம்பெனிக்கு பல லட்ச ரூபாய் பாக்கி செலுத்த வேண்டியது இருந்ததாகவும், இவருக்கு சொந்தமான கிராமத்தில் வீடு கட்டுவதில் பணச் சிக்கல் ஏற்பட்டு பெரும் சிரமம் அடைந்ததால் நகைக்கு ஆசைப்பட்டு பாலமுருகன் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர், அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் விஜயராணி வீட்டில் பிணத்தை போட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

ரெட்டையூரணியில் நடந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்தில் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story