விசாரணைக்கு சென்ற மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார்: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம் - விடிய, விடிய கிராம மக்கள் போராட்டம்


விசாரணைக்கு சென்ற மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார்: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம் - விடிய, விடிய கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 9:45 AM GMT (Updated: 20 Sep 2020 10:39 AM GMT)

மதுரை அருகே விசாரணைக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் சாப்டூர் அருகே உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் வாழைத்தோப்பு என்னும் இடத்தில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் இதயக்கனி அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதுகுறித்து அந்தப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயக்கனியின் சகோதரர் ரமேசை(வயது 22) கடந்த 3 தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். ரமேஷ், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இதனிடையே விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் தனது வீட்டின் அருகில் மலைப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்களும், கிராம மக்களும் அவரது உடலை எடுக்க விடாமல் மறியல் செய்தனர்.

இதைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் உள்பட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன், போலீஸ்காரர் புதியராஜா ஆகிய 2 பேரிடம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை செய்தார்.

இந்தநிலையில் அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் ரமேசின் சாவுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ரமேஷ் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கலையரங்கம் முன்பு நேற்று முன்தினம் இரவு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது.

பின்னர் நேற்று காலையிலும் கிராம மக்கள் அந்த இடத்தில் இருந்து கலையாமல் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதுதொடர்பாக பேரையூர் தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தமிழர் விடுதலைக்களம் ராஜ்குமார், மள்ளர் பேராயம் சுபாஷினி மள்ளச்சி, மள்ளர்நாடு சோலை பழனிவேல் ராஜ், தீண்டாமை ஒழிப்பு மாநில தலைவர் செல்லக்கண்ணு, செயலாளர் சாமுவேல் ராஜ், மாநில குழு உறுப்பினர் முத்து ராணி, கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ரமேசின் பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகையும், இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கிராம மக்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே என்ஜினீயரிங் மாணவர் ரமேஷ் சாவு விவகாரம் தொடர்பாக சாப்டூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகண்ணன், பரமசிவம் ஆகியோரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை மதுரை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story