“234 தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க.வின் பலத்தை பெருக்குகிறோம்” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


“234 தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க.வின் பலத்தை பெருக்குகிறோம்” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2020 4:30 AM IST (Updated: 22 Sept 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

“234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக பா.ஜ.க.வின் பலத்தை பெருக்குகிறோம்“ என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கு சம்பந்தமாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கையும், சட்டப்படியான நடவடிக்கையையும் சரியான முறையில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. ஆனால், எந்த சிந்தனை படைத்தவர்கள் ஆளுகின்றார்கள் என்பதுதான் அதனுடைய மறைமுக அர்த்தம். எனவே, அதில் எந்தவித வித்தியாசமும் இல்லை.

கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி நிச்சயம் போட்டியிடும். 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவதற்காக எங்களது பலத்தை பெருக்கி கொண்டிருக்கிறோம். கூட்டணி முடிவாகும்போது நாங்கள் எங்கே போட்டியிடுவோம் என்பது அப்போது முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழியாக சென்றார். அப்போது வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே வந்த மாநிலத்தலைவர் முருகன், துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story