கோடநாடு வழக்கில் ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் உள்பட 10 பேர் ஆஜர்

கோடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து சயான், மனோஜ், பொள்ளாச்சி சிறையிலிருந்து மனோஜ் சாமி, உதயகுமார், ஜித்தின்ராய், பிஜின் ஆகிய 6 பேரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள சம்சீர் அலி, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 3 பேர் ஆஜராகினர்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தனிப்படை போலீசார் கேரளாவில் தேடி வந்த திபு ஊட்டி கோர்ட்டில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாலை 3 மணிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்தார். நவ்பால், முஸ்டாக், மகேஸ்வரன் ஆகிய 3 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. கோர்ட்டில் சரண் அடைந்ததால் திபு மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது. 10 பேரும் ஆஜராகும்படியும், இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் சயான், மனோஜ் உள்பட 6 பேர் ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்சிகளிடம் விசாரணை நடந்தது குறித்து வக்கீல் ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, வழக்கில் முஸ்தபா என்ற சாட்சியிடம் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விசாரணைக்கு வந்தவர் முஸ்டாக் என்ற பெயர் உடையவர். இது சரியான சாட்சி இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தோம். நீதிபதி பதிவு செய்தார். தொடர்ந்து சயான் உறவினர் என்று கூறி மகேஸ்வரன் என்ற சாட்சியிடம் விசாரணை நடந்தது. ஆனால் அவர் சயானின் உண்மையான உறவினர் இல்லை. போலீசார் ஒரு சாட்சியை தயார் செய்து கொண்டு வந்து உள்ளனர் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story