வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய முன்னாள் ராணுவ வீரர் கைது - பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீதும் தாக்குதல்

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர், தஞ்சை ஆவின் மேலாளரை கத்தியால் குத்தினார். பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டரையும் தாக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல் மாவட்டம் காரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அன்புநாதன்(வயது 28) என்பவர், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சமீபகாலமாக இவர் மீது பல்வேறு தரப்பில் இருந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்தன. இந்த புகார்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தபோது அன்புநாதன் வேலையில் இருக்கும்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அன்புநாதனுக்கு பதிலாக வேறொருவரை வேலைக்கு அனுப்பும்படி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு செக்யூரிட்டி நிறுவனம் அன்புநாதனை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் கோபம் அடைந்த அன்புநாதன், தன்னை பணியில் இருந்து நீக்கியவர்களை பழிவாங்க வேண்டும் என அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஆவின் நிறுவனத்திற்கு அன்புநாதன் வந்தார். இதை அறிந்த மேலாளர் திருமுருகன், அங்கு வந்து உன்னை வேலையை விட்டு அனுப்பியாச்சே... பின்னர் எதற்காக இங்கே வந்தாய் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அன்புநாதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருமுருகனை குத்தினார்.
அதனை தனது கையால் தடுக்க முயற்சி செய்தபோது திருமுரு கனின் கையில் கத்திக்குத்து விழுந்தது. ஒரு பக்கம் குத்தப்பட்ட கத்தி மறுபுறம் வந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட திருமுருகன் சத்தம்போட்டதை அறிந்த சக ஊழியர்கள் விரைந்து வந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள், அன்புநாதனையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வல்லம் குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் ஆகியோர் ஆவின் நிறுவனத்திற்கு விரைந்து சென்று அன்புநாதனை விசாரணைக்காக அழைத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது திடீரென அவர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை கையால் தாக்கி, கத்தியால் குத்த முயன்றார். ஆனால் அதற்குள் உடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், அன்புநாதனை பிடித்தார்.
பின்னர் அவரை கைது செய்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காயம் அடைந்த ஆவின் மேலாளர் திருமுருகன், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story