வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி 5 இடங்களில் விவசாயிகள் போராட்டம் - 79 பேர் கைது


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி 5 இடங்களில் விவசாயிகள் போராட்டம் - 79 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2020 10:30 PM GMT (Updated: 26 Sep 2020 3:09 AM GMT)

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 79 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரியும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் 4 ரோட்டில் கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு பரமத்திவேலூர் தாலுகா கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், கபிலர் மலை ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அமைப்பாளர் தங்கமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 விவசாயிகளை பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் ஜேடர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் குமாரபாளையத்தை அடுத்த கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் வசந்தாமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் தனேந்திரன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பள்ளிபாளையம் ஒன்றிய தலைவர் ராமசாமி, துணை செயலாளர் கோவிந்தராஜ் உள்பட 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலாவில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் எருமப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சிவசந்திரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, நாமக்கல் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ராமசாமி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் மாலா, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பேரை எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், இதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆதி நாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் நல்லாக்கவுண்டர் முன்னிலை வகித்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கரும்புகளை கையில் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story