திராவிட கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி


திராவிட கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2020 10:36 AM IST (Updated: 12 Oct 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதித்த நோயாளிகளுக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சார்ரிடபுள் டிரஸ்டு சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியில் அம்மா கிச்சன் மூலம் தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் 100-வது நாள் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க அரங்கில் உள்ள அம்மா கிச்சன் வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் மறைந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்து விளக்கேற்றி மரியாதை செலுத்தினார். கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, அ.தி.மு.க. வழிகாட்டுகுழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் அய்யப்பன், தமிழரசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காக்க உணவே மருந்து என்ற அடிப்படையில் அம்மா கிச்சன் கடந்த ஜூலை 4-ந் தேதி தொடங்கப்பட்டது. இங்கு மக்களுக்கு சத்தான உணவை சுடச்சுட தொடர்ந்து வழங்கி வருகிறோம். இந்த கிச்சன் தொடங்கி 100-வது நாளை கடந்துள்ளது. கிச்சன் மூலம் 100 நாட்களில் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் திராவிட கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். இதுதான் கடந்த கால வரலாறாக இருந்துள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கான விதிகள் வகுக்கப்பட்ட பின்னரே குழு முழுமையாக செயல்படும்.

உடன்பிறந்தவர்கள் போல் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மூன்று முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் பெருந்தன்மையோடு எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார். மு.க.ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். இதேபோன்று தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக துரைமுருகனை பரிந்துரை செய்ய முடியுமா?. மு.க.ஸ்டாலின் வருவதையே மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தப்படுவதை யாரும் ஏற்க மாட்டார்கள். பட்டம், பதவிகளை எதிர்பார்த்து அ.தி.மு.க.வில் நாங்கள் உழைக்கவில்லை. அ.தி.மு.க.வில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு தங்ககாசு பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story