மோர்தானா அணைப்பகுதியில் மது அருந்துபவர்களை தடுக்க சோதனை சாவடி - கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும் என கலெக்டர் தகவல்


மோர்தானா அணைப்பகுதியில் மது அருந்துபவர்களை தடுக்க சோதனை சாவடி - கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும் என கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2020 2:45 PM GMT (Updated: 13 Oct 2020 2:39 PM GMT)

மோர்தானா அணைப்பகுதியில் மது அருந்துபவர்களை தடுக்க சோதனை சாவடி மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் மின்விளக்கு அமைப்பது, கோட்டையில் இருந்து வெளியேறும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவது, ஆட்டோ நிறுத்தம் குறித்தும், சட்ட விரோதமாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதேப்போல கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் தாழ்வான மின் வயர்களை சரிசெய்தல், ஏரிகுத்தி ஊராட்சியில் உள்ள தரைப்பாலம் சரி செய்வது, சுடுகாடு அமைக்க இடம் கையகப்படுத்துவது போன்ற கோரிக்கைகள் குறித்தும் கல்குவாரிகள் அரசின் அனுமதியுடன் வெடி வைத்து கல் உடைக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

குடியாத்தம் தாலுகா மோர்தானா அணை நிரம்பி உள்ளதால் வனப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் மது வகைகளை கொண்டு சென்று வனப்பகுதியில் மது அருந்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களில் மோர்தானா அணை பகுதியில் பொழுதுபோக்கிற்காக குவியும் நபர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

அதை தடுக்கும் பொருட்டும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், சட்ட விரோத செயல்களை தடுக்கவும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (நீர்வளம்), காவல் துறை, மோட்டார் வாகன போக்குவரத்துத்துறை, வனத்துறை, கலால் ஆகிய துறையினர் இணைந்து கண்காணிப்பு குழு அமைத்து, சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நீரில் மூழ்கி உயிர் இழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கலெக்டர்கள் கணேஷ், ஷேக் மன்சூர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story