மன்னம்பந்தல் ஊராட்சி பெண் தலைவரை சாதியை சொல்லி திட்டியதாக துணைத்தலைவர்-கணவர் மீது வழக்குப்பதிவு - பொய் புகார் அளித்த தலைவர் மீது நடவடிக்கை கோரி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னம்பந்தல் ஊராட்சி பெண் தலைவரை சாதியை சொல்லி திட்டியதாக துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பொய்ப்புகார் அளித்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சி தலைவராக இருப்பவர் பிரியா(வயது 23). தி.மு.க.வை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தன்னை சாதிரீதியாக திட்டி அவமானப்படுத்தி வரும் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்ட பிரியா, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 5-ந் தேதி நான் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை எப்படி ஊராட்சி செலவில் வாங்கலாம்?. நீயெல்லாம் சுழல் நாற்காலியில் உட்காரக் கூடாது, சாதாரண நாற்காலியில் அமர்ந்து தான் ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டு துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் சேர்ந்து தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். மேலும் சாதி பெயரை சொல்லி தன்னை அவமானப்படுத்தியதாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார், அ.தி.மு.க.வை சேர்ந்த மன்னம்பந்தல் ஊராட்சி துணைத்தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகிய 2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஊராட்சியில் நடந்த முறைகேட்டை கேட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சாதிப்பிரச்சினையை தூண்டுவதாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 2 ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட 6 உறுப்பினர்கள் தங்களது ஊராட்சியில் சாதிப்பிரச்சினை இதுவரை எழவில்லை என்றும், துணைத்தலைவரின் அனுமதியில்லாமல் மின்னணு முறையில் ரூ.9 லட்சத்திற்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அது குறித்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததாகவும், அதனை மறைப்பதற்கு ஊராட்சி தலைவர் சாதிப்பிரச்சினையை தூண்டுகிறார் என்றும், தலைவர் பிரியா அலுவலகத்திற்கே வருவதில்லை என்றும், அவருக்கு பதிலாக அவரது தந்தை பெரியசாமி, தாய் மற்றும் சகோதரர்தான் நிர்வாகம் செய்கின்றனர் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சுழல் நாற்காலி பிரச்னை நடக்கும்போது ஊராட்சி தலைவரே அலுவலகத்தில் இல்லை என்றும், சாலையில் விளக்குகள் எரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாற்காலிக்கு இவ்வளவு செலவு தேவையா? என்றுதான் கேட்டதாகவும், இந்த நிலையில் தலைவர் பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்யாமலேயே துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
எனவே மன்னம்பந்தல் ஊராட்சியில் முறையாக விசாரணை செய்து உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா, பங்கஜம் உள்பட 6 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story