பெருமாநல்லூர் அருகே விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் - பெண் உள்பட 5 பேர் கைது


பெருமாநல்லூர் அருகே விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் - பெண் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2020 2:08 AM GMT (Updated: 16 Oct 2020 2:08 AM GMT)

பெருமாநல்லூர் அருகே விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் நாட்ராயன் (வயது 56). இவர் சொந்தமாக விசைத்தறிகள் வைத்து பெட்ஷீட் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவினாசி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாட்ராயன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தனது உறவினர்கள் அனைவரும் துணி வியாபாரம் செய்து வருவதாகவும், எனவே விற்பனை செய்ய பெட்ஷீட்டுகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும் கூறினார்.

மேலும் பலமுறை நாட்ராயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர் இது தொடர்பாக நேரில் வரும்படி அழைத்தார். இதன் காரணமாக கடந்த 13-ந் தேதி, இரவு 8 மணி அளவில் நாட்ராயன், தனது உறவினர் குமாருடன் (26) கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.

அவர்களை அந்த பெண் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். உடனே, அவர்களை தொடர்ந்து 4 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் நாட்ராயன், குமார் ஆகிய 2 பேரையும் மிரட்டி, அவர்களிடமிருந்த செல்போன், 1¾ பவுன் சங்கிலி, ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் நாட்ராயனை அரை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணுடன் நிற்க வைத்து செல்போனில் படம் பிடித்தனர்.

அத்துடன் நாட்ராயனிடம், ரூ.3 லட்சம் தர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டினர். மேலும் ரூ.3 லட்சத்தை பழனியில் மறுநாள் (14ம் தேதி) கொண்டு வந்து தரவேண்டும் எனவும் கூறினார்கள். பின்னர் அன்று இரவு 11.30 மணியளவில் நாட்ராயன், குமார் ஆகியோரை விடுவித்தனர்.

மறுநாள் காலை நாட்ராயனை தொடர்பு கொண்ட அந்த கும்பல் பணம் குறித்து கேட்டனர். எனவே இது குறித்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில், நாட்ராயன் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில், பெருமாநல்லூர் மற்றும் அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அருள், அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கார்த்திக் தங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெருமாநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருக்கன்காட்டுபுதூர் பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டில் ஒரு கும்பல் இருப்பதும், அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் அவினாசி கோர்ட்டு எதிரே வசித்து வரும் கவிதா என்கிற வெண்ணிலா (27) என்பதும், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி (30), திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து என்கிற ராஜா (27), ஜெபராஜ் (24), சின்னத்துரை (27) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்த பெண்ணுடன் சேர்ந்து விசைத்தறி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. மேலும் இசக்கிபாண்டி இந்த திட்டத்தை தீட்டியதுடன் தனது நண்பர்களையும் ஊரிலிருந்து இதற்காக வரவழைத்ததும், இதற்காக ஆண்டிபாளையம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக வீட்டை வாடகைக்கு எடுத்ததும் தெரியவந்துள்ளது.

இசக்கிபாண்டி திருப்பூர் - கொங்கு மெயின் ரோடு பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இசக்கிபாண்டிக்கும், கவிதாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கவிதாவுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கவிதா கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்கள் 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி, கார், கத்தி, அரிவாள், கயிறு, மிளகாய் பொடி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் இசக்கிபாண்டி, இசக்கிமுத்து, ஜெபராஜ் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை, அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர்கள் 5 பேரும் அவினாசி ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) பிரவீண்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story