விலை உயர்வு எதிரொலி: ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் பேட்டி


விலை உயர்வு எதிரொலி: ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2020 4:00 AM IST (Updated: 24 Oct 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வு எதிரொலியாக ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நன்னிலத்தில் நேற்று அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நன்னிலம்,

வெங்காயம் விலை தற்காலிக ஏற்றம் தான். அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்ததால் வெங்காயத்தை அங்கிருந்து எடுத்து வர முடியாததால் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலை தொடரும் பட்சத்தில் தேவைப்பட்டால் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை. பயோமெட்ரிக் சர்வர் பிரச்சினைகளை சரி செய்த பிறகு படிப்படியாக பயோமெட்ரிக் நடைமுறைபடுத்தப்படும். இது சரி செய்யப்படும் வரை பழைய முறையே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குவளைக்கால் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக கூத்தாநல்லூர் அருகே உள்ள பாரதிமூலங்குடியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளிடம் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்றும் கேட்டார். அதனை தொடர்ந்து எடைஎந்திரம், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் அரசாக செயல்படுத்தி ஆட்சி செய்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி பணிகள் சிறப்பாக நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நலன் கருதி அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 22 நாட்களில் 2 லட்சத்து 85 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 72 லட்சம் நெல் மூட்டைகள் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 93 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. மீதம் 7 சதவீதம் மட்டுமே அறுவடை செய்யப்பட வேண்டிய தருணத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட துணை கலெக்டர் கமல்கிஷோர், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், வாணிப கழக பொதுமேலாளர் காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், துணை மேலாளர் காந்தீப்பன், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கூத்தாநல்லூர் தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story