மழை பொய்த்ததால் தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு: மேய்ச்சல் நிலம் குறைவால் ஆடுகள் வளர்ப்பு பாதிப்பு


மழை பொய்த்ததால் தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு: மேய்ச்சல் நிலம் குறைவால் ஆடுகள் வளர்ப்பு பாதிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2020 2:15 PM GMT (Updated: 30 Oct 2020 2:02 PM GMT)

மழை பொய்த்ததால் தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு மேய்ச்சல் நிலம் குறைவதால் ஆடுகள் வளர்ப்பு பாதிக்கப்படுகிறது.

திண்டுக்கல்,

உயிர்களுக்கு உணவளிக்கும் விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அத்தகைய விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், கால்நடை வளர்ப்பு தொழிலும் திகழ்கிறது. விவசாயம் கைகொடுக்காத நிலையில் கால்நடை வளர்ப்பு தான் விவசாயிகளுக்கு வருமானத்தை கொடுக்கும்.எனவே, விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆடுகளை பொறுத்தவரை இறைச்சிக்கு அதிகமாக தேவைப்படுகிறது. எனவே, வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் வெள்ளாடுகள், செம்மறிஆடுகளை மொத்தமாக வளர்த்து மேய்ச்சலுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவ்வாறு மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் ஆடுகளுக்கு தரிசு நிலங்களில் வளரும் புற்களும், செடிகளும் தான் இரையாகின்றன. ஆனால், பருவமழை குறைந்து வருவதால் தரிசு நிலங்கள் புற்கள் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. பருவமழை பொய்த்து வருவதால் காய்ந்த புற்கள் கூட இரையாக கிடைக்காத நிலை உள்ளது.

நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் தரிசு நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. இதனால் ஆடுகள் மேய்வதற்கு போதிய இடம் இல்லாமல் போகும் நிலை உள்ளது. எனினும், சோர்வடையாமல் ஆடுகள் வளர்ப்பில் பலர் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் அருகேயுள்ள அழகுசமுத்திரபட்டியை சேர்ந்த கூடலிங்கம் (வயது 55) என்பவர் கூறியதாவது:-

நான் கடந்த 40 ஆண்டுகளாக செம்மறி ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். தற்போது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால், தொடர்ந்து ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக மழை சரியாக பெய்யவில்லை. இதனால் தரிசு நிலங்கள் புற்கள் கூட இல்லாத பொட்டல்காடாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தரிசுநிலங்கள் வீட்டுமனையாக மாறுவதால், மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்டது. இதனால் தினமும் 25 கி.மீ. தூரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.

அவ்வளவு தூரம் சென்றாலும் ஆடுகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. இதனால் ஆடுகளை மேய்ப்பது சிரமமாக உள்ளது. ஆடுகளின் சாணம், சிறுநீர் விவசாய நிலத்துக்கு நல்ல உரம் ஆகும். இதுதவிர முன்பு விவசாய நிலங்களில் ஆட்டு கிடை அமைப்போம். அதற்கு விவசாயிகள் பணம் கொடுப்பார்கள். அதை குடும்ப செலவுக்கு பயன்படுத்துவோம். தற்போது விவசாயம் குறைந்து விட்டதால் அந்த வருமானமும் நின்று போனது. இதனால் ஆடு வளர்ப்பும் மிகுந்த சிரமமான தொழிலாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story