நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது குமாரசாமி சொல்கிறார்


நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 30 Oct 2020 10:00 PM GMT (Updated: 2020-10-30T23:33:06+05:30)

நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஆர்.ஆர்.நகர், சிரா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியினர் சினிமா நடிகர்-நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மண்டியா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இந்த இடைத்தேர்தல் ஒன்றாகாது. மண்டியாவில் எங்கள் கட்சிக்கு எதிராக பா.ஜனதா, காங்கிரஸ், விவசாய சங்கங்கள் போன்றவை செயல்பட்டன. அதன் காரணமாக நாங்கள் அங்கு தோற்றோம். இது மட்டுமின்றி மண்டியாவில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஊடகங்களும் செயல்பட்டன. அதனால் எங்கள் கட்சி அங்கு தோல்வியை தழுவியது.

சினிமா நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. நடிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது இல்லை. சிரா பகுதிக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி தருவதாக எடியூரப்பா பேசியுள்ளார். முந்தைய பா.ஜனதா ஆட்சியின்போது நீர் கொடுக்காதவர்கள் இப்போது மட்டும் கொடுத்துவிட போகிறார்களா?. வெளியில் இருந்து பா.ஜனதாவினர் இந்த தொகுதிக்கு ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.

எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. மந்திரி அசோக்கிற்கும், சிரா தொகுதிக்கும் என்ன சம்பந்தம்?. சிராவில் எத்தனை தொகுதிகள் உள்ளன, மக்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியுமா?. பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு சிராவில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள். பா.ஜனதாவுக்கு சிரா தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story