தஞ்சையில் 3 இடங்களில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - பண்டிகை கால முன் பணம் வழங்க கோரிக்கை

பண்டிகை கால முன் பணம் வழங்க கோரி தஞ்சையில் 3 இடங்களில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தஞ்சை நகர் கிளை முன்பு அரசு போக்குவரத்து கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. துணை பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மத்திய சங்க தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யூ மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் ராமசாமி, ஐ.என்.டி.யூ.சி. மத்திய சங்க துணைத் தலைவர் மணிகண்டன், தொ.மு.க. நகர் கிளை செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து கழக சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. கவுரவ தலைவர் மனோகரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, ஐ.என்.டி.யூ.சி. மத்திய சங்க துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ஒரு மாதத்திற்கு முன் வழங்கப்பட வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே தமிழகஅரசு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பாரபட்சமின்றி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
15 மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு, மருத்துவ ஓய்வு மற்றும் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் பணப்பலனை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் தொ.மு.ச. பொருளாளர் ஜெயபால் நன்றி கூறினார்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. கிளை தலைவர் எட்வின்பாபு, சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணைத் தலைவர் வெங்கடேசன், துணைச் செயலாளர் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கரந்தை புறநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story