தென்திருப்பேரை பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் கைது

தென்திருப்பேரை பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே கோட்டூரைச் சேர்ந்தவர் ராமையா தாஸ் (வயது 52). விவசாயியான இவர் பா.ஜனதா மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் தென்திருப்பேரை பஜாரில் உள்ள டீக்கடையில் டீக்குடித்தபோது, அங்கு வந்த தென்திருப்பேரை யாதவர் தெருவைச் சேர்ந்த மாரி மகன் இசக்கி (19) திடீரென்று அரிவாளால் ராமையாதாசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இசக்கியின் தந்தை மாரிக்கு சொந்தமான ஆடுகள் ராமையாதாசின் வயலில் புகுந்து உளுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதற்காக ராமையாதாஸ், மாரியிடம் நஷ்ட ஈடு கேட்டார்.
இது தொடர்பாக, அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி, ராமையாதாசை கொலை செய்ததும், இதற்கு இசக்கியின் குடும்பத்தினர், உறவினர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான இசக்கி உள்ளிட்டவர்களை பிடிப்பதற்காக போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் குரங்கணி பகுதியில் தலைமறைவாக இருந்த இசக்கி, அவருடைய அண்ணன் செல்வம் (21), தந்தை மாரி, தாய் சரசுவதி (50), உறவினர்களான கசமுத்து (66), சுந்தர் (42) ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்களை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story