மங்கலத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


மங்கலத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Nov 2020 9:28 AM IST (Updated: 8 Nov 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மங்கலம்,

மங்கலம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் மங்கலம் ஊராட்சிக்கு எல் அண்டு டி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மங்கலத்தில் தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாகாநசீர், மனிதநேய மக்கள் கட்சிபாத்திமா, எஸ்.டி.பி.ஐ ஹக்கீம், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொன்னுச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் வரும்வரை இடத்தைவிட்டு கலைந்து செல்லமாட்டோம் மறியலை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் சுந்தரம், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி, எல் அண்டு டி நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலைமறியலில் ஈடுபட்டர்கள் அதிகாரிகளிடம் “ மங்கலம் ஊராட்சிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், திருப்பூர் ரோடு சுல்தான்பேட்டே முதல் ஆண்டிபாளையம் வரை தார்ச்சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் மங்கலம் ஊராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story