அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்


அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில்  தீர்மானம்
x
தினத்தந்தி 8 Nov 2020 11:46 AM IST (Updated: 8 Nov 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நீலகண்டன் வரவேற்றுப் பேசினார்.

இயக்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச் செயலாளருமான ரெங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசு அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியமைக்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு புதிதாக வழங்கி மொத்தத்தில் 10 சதவீதம் உருவாக்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது ஏற்புடையது அல்ல. எனவே அரசாணை 37 மற்றும் 116-ஐ ரத்து செய்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 17ஏ, 17பி நடவடிக்கைகளை ரத்து செய்து, அந்த ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்து போராட்ட காலத்திற்கு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டுமென இம்மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இடைநிலை ஆசிரியர் ஊதிய பாதிப்பானது தொடர்ந்து ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுவிலும் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ரெங்கராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஆசிரியர்களை பொறுத்தவரை தமிழக அரசு எப்போது பள்ளிகளை திறந்தாலும் பாடம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் பள்ளிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்து தர உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி கொடுக்கும் என நம்புகிறோம். ஆதலால் இப்போதைக்கு போராட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை’ என்றார்.

மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story