திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு: சிறுமியுடன் எடுத்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் சிறுமியுடன் எடுத்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
துடியலூர்,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள செல்லமலையை சேர்ந்தவர் சேதுராம். இவரது மகன் ரஞ்சித் (வயது 35). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக விஷ்வநாதபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவரும், நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சித்துக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியுடன், ரஞ்சித் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.
ரஞ்சித் தனது முதல் திருமணத்தை மறைந்து சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ரஞ்சித், வெளியே சிறுமியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்ததாகவும், அப்போது அவரது செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்து, அறிவுரை கூறினர். மேலும் அவர்கள் ரஞ்சித்தை கண்டித்ததாக தெரிகிறது.ஆனால் ரஞ்சித் நேரில் சென்று, சிறுமியின் பெற்றோரிடம் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். இதற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் சிறுமி தன்னுடன் எடுத்த படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வாலிபர் ரஞ்சித்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story