வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கும் தேர்தல் தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் கனிமொழி எம்.பி. பேச்சு


வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கும் தேர்தல் தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 20 Nov 2020 6:31 PM GMT (Updated: 20 Nov 2020 6:31 PM GMT)

வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கும் தேர்தல், தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

உடன்குடி, 

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டினம் நகராட்சி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்தில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகமது, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி தலைவர் ஜனகர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீராசிராஜூதீன், திருச்செந்தூர் ஓன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசிபொன்ராணி,ஆழ்வார்திருநகரி கிழக்கு ஓன்றிய செயலாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தல்

வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், தமிழக மக்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்கும் தேர்தலாக அமையும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசின் அனைத்து மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் வேளான் சட்டங்களையும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளையும் அ.தி.மு..க அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது. இந்த ஆட்சியினால் தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் விரோத இந்த அரசை தமிழக மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அகற்ற வேண்டும். அதற்கு இப்போதே தேர்தல் பணியை முழுமையாக தொடங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் உடன்குடி நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினம்

காயல்பட்டினம் கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கைப்பந்து மைதானத்தை கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1½ லட்சம் செலவில் சீரமைத்தார். இதன் திறப்பு விழா நடந்தது. ஊர் தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கொம்புத்துறை பங்குதந்தை சகாய ஜோசப் வரவேற்று பேசினார். கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும், கைப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தமிழ்நாடு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொம்புத்துறையை சேர்ந்த அபிஷேக்கை பாராட்டினார். நிகழ்ச்சிகளை பள்ளி கல்விக்குழு தலைவர் ஜான்சன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் பூங்கோதை நன்றி கூறினார். பின்னர் கனிமொழி எம்.பி., காயல்பட்டினம் ஆயிஷா சித்திக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை பார்வையிட்டார்.

நகர தி.மு.க. செயலாளர் முத்து முகமது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அனஸ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு...

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 24 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பெரிசன் பிளாசாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உரிமைகள்

மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி துறை, வாரியம் அமைத்து கொடுத்தவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். உடனடியாக 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றி தந்தார். நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையை போராடித்தான் பெற வேண்டும் என்று இல்லாமல், தானாக கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். நமது உரிமையை நேர்மையோடு, அதிகாரத்தோடு பெறக்கூடிய நாள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கொரோனா வந்ததால், பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி விட்டார். இதனால் அதிகமானவர்களுக்கு இந்த மோட்டார் வாகனத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. அனைத்து தடைகளையும் உடைத்து, வேறு திறன் நமக்கு உள்ளது என்ற நம்பிக்கை தருவதாக இந்த வாகனம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரம்

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் அவலங்களை, எப்படி நாட்டை, நாட்டின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொச்சைப்படுத்தி விட்டுக் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு எப்படி துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பற்றித்தான் எல்லோருடைய தேர்தல் பிரசாரமும் இருக்கும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மத்திய மந்திரி அமித்ஷா, ஒரு மாநிலத்துக்கு வருவது புதிய விஷயம் அல்ல. எல்லா மந்திரிகளும் வந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

Next Story