கட்டிட தொழிலாளி மகளுக்கு கரூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது: ‘தினத்தந்தி கல்வி நிதி’ ஊக்கமளித்ததாக வடமதுரை அரசுப்பள்ளி மாணவி நெகிழ்ச்சி


கட்டிட தொழிலாளி மகளுக்கு கரூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது: ‘தினத்தந்தி கல்வி நிதி’ ஊக்கமளித்ததாக வடமதுரை அரசுப்பள்ளி மாணவி நெகிழ்ச்சி
x

வடமதுரை அரசுப்பள்ளி மாணவிக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ‘தினத்தந்தி கல்வி நிதி‘ தனக்கு ஊக்கமளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வடமதுரை, 

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 17) என்ற மாணவிக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்தது. அவருக்கு கரூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த நெகிழ்ச்சியில் உமாமகேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தந்தை பாலசுப்பிரமணியன். கட்டிட தொழிலாளி. எனது தாயார் காளீஸ்வரி. கூலித்தொழிலாளி. நான் மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வில் 218 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். எனக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. நான் 9-ம் வகுப்பு வரை சிங்காரக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தேன். 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 463 மதிப்பெண்களும், இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 506 மதிப்பெண்களும் பெற்றேன்.

சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்று எனக்கு தீராத ஆசை இருந்தது. இதனால் ஆசிரியர்களின் உதவியுடன் நன்கு படித்தேன். மருத்துவ படிப்பிற்கு செலவு அதிகமாகும் என்பதால் முதலில் பெற்றோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூட அனுமதி தரவில்லை. எனது பள்ளி ஆசிரியர்களே எனக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்தனர். அதன்பின்னர் வீட்டிலிருந்தவாறே நீட் தேர்வுக்கு என்னை தயார்படுத்தினேன். முதலில் நீட் தேர்வு முடிவு வெளியானபோது, அந்த பட்டியலில் 19 ஆயிரத்து 616-வது இடத்தில் இருந்தேன். இதனால் மருத்துவ சீட் கிடைக்காது என்று கவலையில் இருந்தேன். அதன் பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 218 மதிப்பெண்கள் பெற்றிருந்த எனக்கு நான் விரும்பியபடி கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நான் 463 மதிப்பெண் பெற்றேன். அப்போது தினத்தந்தி வழங்கிய கல்வி நிதி எனக்கு கிடைத்தது. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தினத்தந்தி வழங்கிய ரூ.10 ஆயிரம் நிதியை எனக்கு வழங்கினார். இது எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மாணவர்களிடமும், எங்கள் கிராம மக்களிடமும் எனது குடும்பத்திற்கு அது மரியாதையை ஏற்படுத்தியது. கூலி வேலை செய்து மிகவும் கஷ்டமான சூழலில் வசித்து வரும் எனது பெற்றோருக்கு அந்த நிதி பெரும் உதவியாக இருந்தது. இதனால் மேலும் நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், டாக்டராக வேண்டும் என்ற லட்சியமும் அதிகரித்தது. தினத்தந்தி கல்வி நிதியை பெற்றபோது, டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என தெரிவித்திருந்தேன். அந்த லட்சிய கனவு தற்போது நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கு தூண்டுகோலாக இருந்த தினத்தந்திக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story