வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பார்வையாளர் சிவசண்முகராஜா வேண்டுகோள்


வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பார்வையாளர் சிவசண்முகராஜா வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Nov 2020 4:57 AM GMT (Updated: 22 Nov 2020 4:57 AM GMT)

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக, சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை பார்வையிட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தமிழ்நாடு செய்திதாள்கள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குனர் சிவசண்முகராஜா தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசும்போது கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணியாகும். தங்கள் பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒருவர்கூட விடுபடாமல் சேர்க்க பணியாற்றிட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் அதனை சரிசெய்யும் பணிகளில் அரசுத்துறை அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது வாக்குச்சாவடி முகவர்கள் விவரங்களை விரைவாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்கு உதவவேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும்தான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்த பணிகளுக்காக அதிகபட்சம் 30 படிவங்களை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்ததை பார்வையிட்டு, சிறப்பு முகாம் நடைபெறுவதை எவ்வாறு தெரிந்து கொண்டனர் என்பதை கேட்டறிந்தார். அவர்களிடம் 18 வயது பூர்த்தியடைந்த உங்கள் உறவினர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு தூதுவர்களாக செயல்பட்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், தாசில்தார் (தேர்தல்) சுப்பிரமணியம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story