சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்


சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
x
தினத்தந்தி 23 Nov 2020 10:04 PM GMT (Updated: 23 Nov 2020 10:04 PM GMT)

சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தினார்.

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியே ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதத்தில் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம்அபராதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு செலுத்தினார். அவரது வக்கீல்கள் இந்த அபராதத்தொகையை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினர். இதையடுத்து சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக உள்ளார்.

இளவரசி

இந்த நிலையில் சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் தனது அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை நேற்று பெங்களூரு தனிக்கோர்ட்டில் வரைவோலை மூலம் செலுத்தினார். அவரது வக்கீல் அசோகன் இந்த அபராதத்தொகையை செலுத்தியுள்ளார். சிறையில் இருந்த நாட்களை கழித்து பார்த்தால் சசிகலாவுக்கு முன்பே இளவரசி விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் இதுவரை பரோல் விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story