திருச்சியில், விவசாயிகள் பாதி மொட்டையடித்து நூதன போராட்டம் - டெல்லி பயணத்தை போலீசார் தடுத்ததால் மறியல்-பரபரப்பு


திருச்சியில், விவசாயிகள் பாதி மொட்டையடித்து நூதன போராட்டம் - டெல்லி பயணத்தை போலீசார் தடுத்ததால் மறியல்-பரபரப்பு
x
தினத்தந்தி 25 Nov 2020 3:45 AM IST (Updated: 25 Nov 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அய்யாக் கண்ணு உள்பட விவசாயிகள் பாதி மொட்டையடித்து நூதன போராட்டம் நடத்தினார்கள். டெல்லி பயணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அகில இந்திய அளவில் விவசாயிகள் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்துகிறார்கள். அதேநேரம், இந்த போராட்டத்தில் பங்கேற்பதுடன், விவசாயிகள் பற்றி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் டெல்லியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து இருந்தார்.

இதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று திருச்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை சென்று, பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வதற்காக ரெயில்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் அய்யாக்கண்ணுவை நேற்று முன்தினம் இரவில் இருந்தே போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.

திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலையிலுள்ள அய்யாக்கண்ணுவின் வீட்டை சுற்றி நேற்று அதிகாலை முதல் ஏராளமான போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். காலை 8 மணி அளவில் அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

அப்போது ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில், குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். டெல்லி செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறினார்கள். இதனால் அய்யாக்கண்ணுவுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் அய்யாக்கண்ணுவின் பின்னால் திரண்டு நின்றார்கள். பின்னர் அவர்கள் கரூர் பைபாஸ் ரோட்டிற்கு வந்து சிறிது நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வீட்டு சிறையில் வைத்தனர்.

அப்போது அய்யாக்கண்ணு தனது தலையில் பாதி முடியையும், மீசை மற்றும் தாடியில் பாதியையும் மழித்து பாதி மொட்டை போட்டார். அவரைத் தொடர்ந்து 12 விவசாயிகள் பாதி மொட்டை போட்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு ‘விவசாயிகளின் போராட்டத்தை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொட்டை அடித்து இந்த நூதன போராட்டத்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் இதே கோலத்தில் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருப்போம். எங்களை டெல்லிக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது‘ என்றார். மேலும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கலெக் டர் சிவராசு மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் இருந்ததால், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிவேலுவை சந்தித்து தங்களது போராட்டம் பற்றி கூறினார்கள்.

அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் தொடர்பான புகார் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரு வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார். அவர் அளித்த உறுதியை தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அவர்களை மீண்டும் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணுவின் வீட்டிலேயே போலீசார் இறக்கிவிட்டு சென்றனர்.


Next Story