சேலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தலைமறைவான அண்ணன், தம்பியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை


சேலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தலைமறைவான அண்ணன், தம்பியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2020 4:30 AM IST (Updated: 26 Nov 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான அண்ணன்-தம்பியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சேலம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னமாயகுளம் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி. இவருடைய மகன் எடிசன் (வயது 23). இவர், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்ததால் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (28) மற்றும் தேவகுமார் ஆகியோரால் கடந்த ஆகஸ்டு மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கடந்த 5-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். கோபிநாத்தும், தேவகுமாரும் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இருவேளையும் கையெழுத்திட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கோபிநாத்தும், தேவகுமாரும் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தினமும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு ஜங்ஷன் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சுப்பிரமணியம் நகர் அருகே இருவரும் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் கொலை செய்ய வீச்சரிவாள், பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர்.

இதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் கோபிநாத்தை மட்டும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார். அதேசமயம் அந்த கும்பலிடம் இருந்து தேவகுமார் தப்பி ஓடி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதை அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீசார் உஷார் படுத்தப்பட்டநிலையில் கொலையாளிகள் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்தனர்.

அப்போது ஒரு பஸ்சில் 3 பேர் ரத்தக்கறையுடன் இருந்ததை அறிந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கோபிநாத் கொலையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ரமேஷ், கார்த்திக், விக்னேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கீழக்கரையில் நடந்த எடிசன் கொலைக்கு பழிக்குப்பழியாக கோபிநாத்தை கொன்றதாகவும், தங்களை எடிசனின் தந்தை அருள்மணி என்பவர் சேலத்திற்கு அழைத்து வந்ததாகவும் கைதானவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கீழக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட எடிசன் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோபிநாத்தின் தாய், தங்கையை கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் கேட்காத நிலையில் எடிசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் எடிசனை கொன்ற கோபிநாத், தேவகுமார் ஆகியோரை தீர்த்துக்கட்ட எடிசனின் தந்தை அருள்மணி, இவரது தம்பி அந்தோணி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கோபிநாத்தும், தேவகுமாரும் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கோர்ட்டு உத்தரவுபடி காலையும், மாலையும் கையெழுத்திட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வெளியே வரும்போது தீர்த்துக் கட்ட வேண்டும் என அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக ஏற்கனவே கொலை வழக்கில் கைதான ரமேஷிடம் தெரிவித்திருந்தனர். அவரும் சம்மதம் தெரிவித்ததுடன் அந்தோணியின் உறவினர்களான விக்னேஷ், கார்த்தி ஆகியோருடன் சேலம் வந்தனர். கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகியோர் எங்கு தங்கி உள்ளனர் என்றும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட எந்த வழியாகச் செல்கிறார்கள் என்பதையும் மறைமுகமாக கொலை கும்பல் கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து அவர்கள் செல்லும் பாதையை தெரிந்து கொண்ட கொலை கும்பல் இருவரும் கொலை செய்யப்படும் காட்சியை நேரில் பார்க்க வேண்டும் என அருள்மணியும் அவரது சகோதரர் அந்தோணியும் ஏற்கனவே சபதம் செய்திருந்தனர். அதன்படியே கோபிநாத் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனால் தலைமறைவான அருள்மணி, அந்தோணி ஆகியோரை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

Next Story