புயல், கனமழையில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன - கலெக்டர் தகவல்


புயல், கனமழையில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2020 10:00 AM GMT (Updated: 2 Dec 2020 9:49 AM GMT)

புயல் மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று பாம்பன் பகுதிக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பாம்பன் பகுதிக்கு வருகை தந்தனர். இதைதொடர்ந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி தூக்கு பாலத்தை கடந்து சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகளையும் பார்வையிட்டதுடன் தென் கடல்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாம்பனில் மழை நீர் தேங்கும் பகுதியான பாம்பன் சின்ன பாலம், தோப்புக்காடு மற்றும் தங்கச்சிமடம் அய்யன்தோப்பு உள்ளிட்ட இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ராமேசுவரம் துறைமுக கடற்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இதில் எளிதில் மழைநீர் தேங்கி கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் அவசர கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூட கட்டிடங்கள் உள்ளிட்ட மொத்தம் மாவட்டம் முழுவதும் 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைக்கேற்ப தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அருகே உள்ள நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் கலெகடர் பிரதீப்குமார், சப் கலெக்டர் சுகபத்ரா, மீன்வளத்துறை துணை இயக்குனர் பரிதி இளம்வழுதி, ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் ராமர், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா பேட்ரிக், தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் புயல், மழை பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாட்ஸ்-அப்பில் கலெக்டர் பதிவிட்டுள்ளார். அதில், இன்று புயல், பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு நாம் அனைவரும் முன்எச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடலோர பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடியவர்கள், குடிசைகளில் வசிப்பவர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள மையங்களில் தங்க வைக்க வேண்டும். இந்த பணிகளை அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story