மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கடலூரில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - 90 பேர் கைது
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கடலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூரில்,
தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களின் 5 சதவீத முன்னுரிமையுடன் வேலை வழங்க, தமிழகத்தில் தனியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ந் தேதி (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட போவதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மறியலில் ஈடுபடுவதற்காக 2 வேன்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறி, அவர் களை வேன்களில் இருந்து இறங்க விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து அவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுதி பொறுப்பாளர்கள் குணசேகரன், தனசேகரன், ரஞ்சித்குமார், ராசையன், ராமலிங்கம், செந்தில், இளங்கோ, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மாற்றுத்திறனாளிகள் 90 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story