நாட்டை வழிநடத்தும் தலைவராகுவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது சரத்பவார் சொல்கிறார்

நாட்டை வழிநடத்தும் தலைவராகுவதில் ராகுல்காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
மும்பை,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா எழுதிய சுயசரிதை நூலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பற்றி விமர்சித்து இருந்தார். அதில், “ ராகுல்காந்தி பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரை போல் பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார் “ என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்திய நாட்டு தலைவரை பற்றி வெளிநாட்டு தலைவரான ஒபாமா கருத்து கூறியதை கடுமையாக கண்டித்தது.
அதேவேளையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராகுல் காந்தியை
விமர்சனம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். மராத்தி பத்திரிகை ஒன்றுக்காக முன்னாள் எம்.பி. விஜய் தார்தா சரத்பவாரிடம் பேட்டி கண்டார். அப்போது சரத்பவாரிடம், “ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் தலைவராக இந்த தேசம் ஏற்றுக்கொள்ளுமா? எனக் கேட்டார். அதற்கு சரத்பவார் பதில் அளிக்கையில், “ இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. அவர் இன்னும் பக்குவம் பற்றாக்குறை உள்ளவராக தான் தோன்றுகிறது “ என்று கூறினார்.
ராகுல் காந்தி பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த சரத்பவார், “நாம் அனைவரின் கருத்தையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய நாட்டின் தலைமையை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் கூற முடியும். ஆனால், மற்றொரு நாட்டின் தலைமையை பற்றி பேசமாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுக்கான எல்லையை, அளவுகோலை கடைபிடிக்க வேண்டும். என்னை பொருத்தவரை ஒபாமா எல்லை மீறி பேசிவிட்டார்“ என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் கட்சிக்கு ராகுல் காந்தி தடையாக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டதற்கு, சரத்பவார் பதில் அளிக்கையில் “ எந்த ஒரு கட்சியின் தலைவரும் கட்சியின் அமைப்புக்குள் என்ன விதமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அதைப்பொருத்தே எதிர்காலம் அமையும்.
எனக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பம் இடையே வேறுபாடு இருந்தது. ஆனால், இன்றும் காங்கிரஸ் தொண்டர்கள் காந்தி- நேரு குடும்பத்தினர் மீது பாசத்துடன், பற்றுடன் இருக்கிறார்கள்“ என தெரிவித்தார். காங்கிரசில் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரசை தொடங்கிய சரத்பவார் சில மாதங்களிலேயே காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story