மாமல்லபுரம் புராதன சின்னங்களை 15-ந்தேதி முதல் திறக்க நடவடிக்கை; அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

மாமல்லபுரம் புராதன சின்னங்களை 15-ந்தேதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.
ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வாக்குச்சாவடி மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சீபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. மரகதம்குமரவேல், மாவட்ட நிர்வாகிகள் ஆனூர் பக்தவச்சலம், பி.ஏ.எஸ்வந்த்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமல்லபுரம் நகர செயலாளர் கணேசன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவரும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான பாண்டியராஜன் கலந்து கொண்டு திருப்போரூர் தொகுதியில் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி மகளிர் அணி பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி எப்படி வாக்கு சேகரிப்பது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
புராதன சின்னங்கள்
மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவடைந்த வியாபாரிகள், ஏழைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மாமல்லபுரம் புராதன சின்னங்களை திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-
தமிழகத்தில் மத்திய அரசின் புராதன சின்னங்கள் 411 உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இங்குள்ள (மாமல்லபுரத்தில்) புராதன சின்னம் அனுமதி இல்லாததால் இன்னும் திறக்கப்படவில்லை.
திறக்க நடவடிக்கை
தமிழகத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 110 புராதன சின்னங்கள் உள்ளன. இந்த புராதன சின்னங்கள் வருகிற 15-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளது. அதனை திறக்கும்போது மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை வருகிற 15-ந்தேதி முதல் திறக்க மத்திய தொல்லியல் துறையிடம் பேசிவருகிறேம்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் இ.சி.ஆர்.சுதாகர், நகர அவைத்தலைவர் எம்.சேகர், முன்னாள் கவுன்சிலர் பூங்குழலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story