கலப்பட ஜவ்வரிசி கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேகோசர்வ் தொழிலாளர்கள் சாலை மறியல்; சேலம்-பெங்களூரு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

கலப்பட ஜவ்வரிசி கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேகோசர்வ் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்-பெங்களூரு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேகோசர்வ் நிறுவனம்
சேலம் மாமங்கம் பகுதியில் தமிழக அரசின் சேகோசர்வ் நிறுவனம் உள்ளது. இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்து விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சேகோசர்வில் தரமான ஜவ்வரிசி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தரமற்ற ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேகோசர்வுக்கு வந்தது. அப்போது, சேகோசர்வ் அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றி வந்த அதன் உரிமையாளர், நாங்கள் அப்படி தான் ஜவ்வரிசி தயார் செய்வோம் என கூறியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனிடையே கலப்பட ஜவ்வரிசி முட்டைகளை பரிசோதனை செய்வதற்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் லாரியில் இருந்தவர்கள் சேகோசர்வ் நிறுவனத்திற்கு ஜவ்வரிசி தரமாட்டோம் என கூறிவிட்டு லாரியை அங்கிருந்து ஓட்டிச் சென்றுவிட்டனர். இதனால் சேகோசர்வ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அறிந்த சேகோசர்வ் தொழிலாளர்கள் நேற்று மாலை குரங்குசாவடி அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களும் அதில் கலந்து கொண்டனர். இந்த மறியலால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் உள்பட எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், சேகோசர்வ் அதிகாரிகளை மிரட்டி சென்ற கலப்பட ஜவ்வரிசியை கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரியை எடுத்து சென்ற டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பஸ்களும், மற்ற வாகனங்களும் அந்த வழியாக சென்றது. இந்த மறியலால் குரங்குசாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story