ஏ.டி.எம். மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்


ஏ.டி.எம். மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்
x
தினத்தந்தி 10 Dec 2020 6:24 PM IST (Updated: 10 Dec 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி காவலாளி விரட்டினார். இது சம்பந்தமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் தனியார் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் ராமநாதபுரம் வீரபத்ரசாமி கோவில் தெருவை சேர்ந்த ருத்ரபதி(வயது 50) என்பவர் இரவு காவலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் பனியன் அணிந்த வாலிபர் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்தார். கையில் இரும்பு ஆயுதம் வைத்திருந்த அவர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காவலாளியை சரமாரியாக தாக்கினார்.

திடீரென தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த காவலாளி ருத்ரபதி, ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே வந்தார். இதைதொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இந்த நிலையில் ருத்ரபதி ஏ.டி.எம். மையத்துக்குள் மீண்டும் சென்று எந்திரத்தை உடைக்கவிடாமல் அந்த நபருடன் போராடினார். மேலும் ஹெல்மெட்டை தலையில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரை அடையாளம் காணும் வகையில் முயன்றார்.

கொள்ளையடிக்க வந்த நபர் காவலாளியின் முகம், தலை உள்ளிட்ட பகுதியில் தாக்கினார். இருப்பினும் அதை தாங்கிக்கொண்டு காவலாளி அந்த நபரை கொள்ளையடிக்க விடாமல் தடுத்தார். மேலும் ‘திருடன், திருடன்’ என கத்தி கூச்சலிட்டார். எனவே வேறு வழியின்றி ருத்ரபதியை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து அந்த நபர் ஓடிவிட்டார்.

பின்னர் இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் ஹரிகரன் (47), ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை தேடிவருகின்றனர். கொள்ளையனுக்கும், காவலாளிக்கும் இடையே நடந்த போராட்டம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையனை தேடிவருகின்றனர்.

ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை தடுத்து அவருடன் கடும் போராட்டம் நடத்திய காவலாளி ருத்ரபதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஏ.டி.எம். காவலாளி ருத்ரபதியை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார்.

Next Story