ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்துக்கு இடம் தேர்வு செய்ய மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு


ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்துக்கு இடம் தேர்வு செய்ய மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2020 3:30 AM IST (Updated: 12 Dec 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து மத்திய தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் மற்றும் மத்திய தொல்லியல் துறையினரால் பலமுறை அகழாய்வு செய்யப்பட்டு உள்ளது. வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் அகழாய்வு பணியின்போது கிடைத்த பொருட்களை அந்தந்த நாடுகளுக்கு எடுத்துச் சென்ற நிலையில், மத்திய தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வு பணிக்கான ஆய்வறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறையினரால் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் அகழாய்வு பணி நடைபெற்றது. மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி ஆதிச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அருண் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு அறிவித்தபடி, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 5 இடங்களை பார்வையிட்டு உள்ளோம். உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அருங்காட்சியம் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணி மேற்கொள்ளப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் தகவல் மைய கட்டிடத்தில் தற்காலிகமாக அருங்காட்சியம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மத்திய தொழில் துறை ஆய்வாளர் எத்திஸ், முத்துகுமார், மத்திய தொல்லியல் துறை அதிகாரி அறவாழி, பராமரிப்பு அலுவலர் சங்கர், பாலகிருஷ்ணன், தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், சிவகளை அகழாய்வு இயக்குனர்கள் பிரபாகரன், தங்கதுரை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனர் லோகநாதன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் கந்தசுப்பு, மணிமாலா, சிவராமன், லூர்து பிரான்சிஸ், சர்வேயர் அண்ணாமலை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story