திருவாரூரில் ஆலை உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டவர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் வீட்டில் ரூ.57 லட்சம் சிக்கியது - லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை


திருவாரூரில் ஆலை உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டவர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் வீட்டில் ரூ.57 லட்சம் சிக்கியது - லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை
x
தினத்தந்தி 12 Dec 2020 4:00 AM IST (Updated: 12 Dec 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஆலை உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயரின் வீட்டில் ரூ.57 லட்சம் பணம் சிக்கியது.

வண்டலூர்,

திருவாரூர் சாமி மடத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58). அரிசி ஆலை அதிபர். இவருடைய ஆலை செயல்பாட்டிற்கான காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் தனராஜ் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் லஞ்சம் தர விரும்பாத துரைசாமி, இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை துரைசாமி லஞ்சமாக என்ஜினீயர் தனராஜிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தனராஜூக்கு சொந்த வீட்டில் லஞ்சமாக பெற்ற பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

அதன் பேரில், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊரப்பாக்கம் சத்யபிரியா நகரில் உள்ள தனராஜ் வீட்டில் விடிய, விடிய சோதனை செய்தனர்.

அப்போது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.57 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இது தவிர அங்கு பணமதிப்பு இழப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.2½ லட்சமும் இருந்தது தெரியவந்தது.

இது சம்பந்தமாக என்ஜினீயர் தனராஜூவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் நாகை மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி ஆண்டோ சிட்டி பகுதியில் அவர் குடியிருந்து வந்த வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story