திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 726 வழக்குகள் முடித்து வைப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 726 வழக்குகள் முடித்து வைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 8:30 PM IST (Updated: 13 Dec 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 726 வழக்குகளள் முடித்து வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான திருமகள் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெற்றது.

இதில் சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் என 4,703 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 726 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.4 கோடியே 13 லட்சத்து 8 ஆயிரத்து 407 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆரணி சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ஜெயவேல் உத்தரவுபடி, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாஜிஸ்திரேட்டு எஸ்.மகாலட்சுமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ஏ.சிகாமணி வரவேற்றார். இதில், 33 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2 கோடியே 25 லட்சத்து 37 ஆயிரத்து 605 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதி மன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பூபாலன், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜமூர்த்தி, அரசு வக்கீல் வி.வெங்கடேசன், வழக்கறிஞர் சரவணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

செய்யாறு வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியான ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார்.

இதில் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 41 மோட்டார் வாகன விபத்து வழக்கில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 83 ஆயிரத்து 200-க்கும், 17 வங்கி வழக்குகளில் ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் உள்பட மொத்தம் 78 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 220-க்கு தீர்வு காணப்பட்டது. 5 குடும்ப நல வழக்கில் சமரசம் பேசி சேர்ந்து வாழ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story